திருமணமான மூன்றே நாட்களில் புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!!
திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மனோஜ் குமாருக்கும்(31), சென்னை பீர்க்கன்கரணையை சேர்ந்த மருத்துவரான கார்த்திகா(30) என்பவருக்கும் கடந்த 28-ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில், நேற்று இரவு சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு காரில் சென்ற போது, பேரம்பாக்கத்தை அடுத்த கூவம் பகுதியில் எதிரே வந்த சிமெண்ட் கலவை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி நிலை தடுமாறி கார் மீது மோதியதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் புதுமண தம்பதி இருவரும் காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு காவல் துறையினர் நிகழ்விடத்துக்கு வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, சுமார் 5 மணி நேரம் போராடி லாரிக்குள் சிக்கிக் கொண்டிருந்த காரை வெளியே எடுத்தனர். இந்த சம்பவத்தால் பூந்தமல்லி-அரக்கோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருமணமாகி 3 நாட்களிலேயே விபத்தில் சிக்கி புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment